அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. திங்கட்கிழமை (பிப்.3) காலை வர்த்தகம் தொடங்கியதும் 67 பைசா சரிந்து ரூ.87.29 என இந்திய ரூபாய் வீழ்ச்சி கண்டது.
கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக வரி விதித்துள்ளது சர்வதேச அளவில் வணிகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீதமும், சீன பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
வெளிநாட்டு மூலதன நிதி தொடர்ந்து வெளியேறுவதாலும், வெளிநாட்டு சந்தைகளில் அமெரிக்க டாலரின் மதிப்பு காரணமாகவும் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 86.62 என இருந்தது. இந்நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியதும் 87.29 என ரூபாய் மதிப்பு மேலும் சரிவு கண்டது.
இந்திய ரூபாய் மதிப்பின் சரிவுக்கு ட்ரம்ப்பின் வரி விதிப்பு காரணம் என வணிக துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாது அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு ஆசியாவில் உள்ள சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கரன்சிகளும் சரிவை கண்டுள்ளன.